இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சிறப்பு பள்ளிகளுக்கான கவுன்சில் சார்பாக, மதுரையிலுள்ள தனியார் விடுதியில் சிறப்பு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை, மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட நல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பள்ளிகளுக்கான கவுன்சிலின் தலைவர் ரவிக்குமார், செயலாளர் வெற்றிவேல் முருகன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் பணி கடினமானது
இந்நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் புகழேந்தி, "பிற பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் பணி கடினமானது. சிறப்புக் குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று கல்விப் பணியாற்றுவது மிக மிக உன்னதமானது. ஆனால், சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லை என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்தப் பணியை மேலும் ஈடுபாட்டுடன் நீங்கள் செய்து வரும் பட்சத்தில் அங்கீகாரம் உங்களை நிச்சயம் தேடி வரும். இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை" என்றார்.
வெறும் 14 ஆயிரம் தான் ஊதியமா
தொடர்ந்து பேசிய மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர், "சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு வெறும் 14 ஆயிரம் ரூபாய் தான் ஊதியம் என்பது நல்ல விஷயமல்ல. இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசால் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
இது தொடர்பாக நானும் சுவாமிநாதனும் பேசினோம் என்பதை குறிப்பிட்டுக் கூற வேண்டுகிறேன். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட அனைவருமே ஆசிரியர்களால்தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்தோம்' என்றார்.
சிறப்புக் குழந்தைகளை பாவமூட்டையாக எண்ணும் சமூதாயம்!
அதன்பின், நிறைவுரை ஆற்றிய நீதியரசர் சுவாமிநாதன், "சிறப்புக் குழந்தைகள் உள்ள குடும்பங்களின் உறுப்பினர்களே அக்குழந்தைகளை அவமானச் சின்னமாகக் கருதுகிறார்கள். இந்நிகழ்வுகளை கண்டு நான் பலமுறை மனம் நொந்திருக்கிறேன்.
சிறப்புக் குழந்தைகளை பாவமூட்டையைப் போன்று கருதுகின்ற சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். அவர்களை சிறந்த முறையில் உருவாக்கி ஆளாக்குகின்ற வல்லமை சிறப்புப் பள்ளி ஆசிரியர்களைவிட வேறு யாருக்கும் கிடையாது. ஆனால், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பது வேதனையளிக்கிறது.
இவர்களின் பணி குறித்த விஷயங்கள் பொதுத்தளங்களில் பரவலாக்கப்பட வேண்டும். அதற்கொரு களம் அமைவதற்கான முதல் முயற்சியாக இந்த நிகழ்வு அமைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்