மதுரை: தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள்கள் விற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 15) விசாரணைக்கு வந்தது. அப்போது போதைப்பொருள் தடுப்பு வழக்கில் ஏன் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படுகிறது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அதில், “போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது 180 நாள்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்ய வேண்டும். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யாத காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து தொடர் நடவடிக்கை எடுத்தால் குற்றங்கள் குறையும் எனத் தெரிவித்த நீதிபதி, காவல் துறைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் அனைத்து வழக்கு விசாரணைகளையும் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு