மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுசிலா. இவர் சுகாதார பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் சென்னையிலிருந்து மதுரைக்கு இன்று (ஜூன் 11) காலை பாண்டியன் அதிவிரைவு ரயிலில் வந்துள்ளார். அப்போது சுசிலா கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து அவரது பையில் வைத்திருந்த சுமார் ஏழு பவுன் நகைகள், பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடியுள்ளார்.
இந்நிலையில் ரயில், மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது சுசிலா தனது பொருட்களை சரிபார்க்கும்போது நகை திருடுபோனதை அறிந்தார். இதனையடுத்து சுசிலா ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் பெட்டியில் அமர்ந்திருந்த அனைவரையும் தனித்தனியாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருடியது தெரியவந்தது. பின் அவரிடம் இருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த காவல் துறையினரை பயணிகள் வெகுவாக பாராட்டினார்.