மதுரை: மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ள மலர் வணிக வளாகம் ஆகும். இங்கு வாடிப்பட்டி, பாலமேடு, சத்திரப்பட்டி, மேலூர், காரியாபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக பல்வேறு வகையான பூக்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் மதுரை மல்லிகையைப் பொறுத்தவரை, இதன் தரம், மணம் மற்றும் தன்மை காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்றிருக்கின்ற காரணத்தால், தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலும் உலக அளவிலும் குறிப்பிடத்தகுந்த சந்தை வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், மதுரையில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு மதுரை மல்லிகை விமானத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களின் ஆன்மீகத்தில் முக்கியப் பங்காற்றும் ஆடி மாதத்தில் பொதுவாக அனைத்துப் பூக்களும் விலை உயர்ந்து காணப்படும். இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கணிசமான விலையேற்றத்தில் இருந்தது.
இந்த நிலையில், தற்போது ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி நோன்பு காரணமாக மதுரை மல்லிகை கிலோ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிற பூக்களைப் பொறுத்தவரை, முல்லை 700 ரூபாய், பிச்சி 600 ரூபாய், கனகாம்பரம் 500 ரூபாய், அரளி 300 ரூபாய், பட்டன்ரோஸ் 300 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாய், அரளி 300 ரூபாய், வாடாமல்லி 150 ரூபாய், சம்பங்கி 200 ரூபாய் என விற்பனையாகிறது. மேலும் பிற வண்ணப் பூக்களும் கணிசமாக விலை ஏற்றம் கண்டு உள்ளன.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த பூக்கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "தற்போது ஓணம் பண்டிகையோடு, வரலட்சுமி நோன்பும் வருகிற காரணத்தால் பூக்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. மதுரை மல்லிகை பூவை பொறுத்தவரை முதல் தரம் ரூ.900க்கும் அதற்கு அடுத்த தரம் ரூ.800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும்" என தெரிவித்துள்ளார்.