மதுரை: மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ள மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக மதுரை மல்லிகைக்கு உலகம் முழுவதும் நல்ல சந்தை வாய்ப்பு உண்டு. அதன் மணம், தரம் காரணமாக மத்திய அரசு மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கியுள்ளது. மதுரையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மதுரை மல்லிகை கணிசமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 50 டன்னுக்கு மேலாக மதுரை மல்லிகை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக உற்பத்தி குறைந்ததாலும் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் இருந்த காரணத்தாலும் மதுரை மல்லிகையின் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூபாய் 3000 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது மல்லிகை வரத்து அதிகரித்துள்ளதாலும் வேறு முக்கிய விழாக்களோ முகூர்த்த நாட்களோ இல்லாத காரணத்தால் சடசடவென இறங்கி தற்போது கிலோ ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி மற்றும் முல்லைப் பூக்கள் ரூ.400, அரளி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.100, சம்பங்கி ரூ.80 என விற்பனை செய்யப்படுகின்றன.