Jallikattu Restriction: மதுரை மாவட்டத்தில் பொங்கலை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் தென் மண்டல காவல் துறைத் தலைவர் அன்பு ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிறகு செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் இணையவழியில் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேபோன்று உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்கள் 150 பேர் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம். பிறர் யாருக்கும் அனுமதியில்லை.
அதேபோன்று அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களோ காளைகளோ, மேற்கண்ட ஊர்களில் ஏதேனும் ஒன்றில்தான் பங்கேற்க முடியும். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அதேபோன்று காளையின் உரிமையாளரும், அவருடன் ஒரு உதவியாளரும் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் இ-சேவை மையம் மூலமாக பதிவு செய்தல் வேண்டும்.
வெளி மாவட்டங்களிலிருந்து யாரும் பங்கேற்க முடியாது. போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த முறை ஜல்லிக்கட்டு முடிவுகளிலோ நடைமுறைகளிலோ முறைகேடுகள் என்பது ஒரு சதவிகிதம்கூட இருக்காது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மேல் முறையீடு