மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், ரகுநாதபுரத்தில் தனிநபர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும், கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயல்படும் விதமாக ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
புதுக்கோட்டை கரம்பக்குடியைச் சேர்ந்த மாணிக்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “புதுக்கோட்டை ரகுநாதபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அரசு வகுத்திருக்கும் அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்து, பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இந்நிலையில் ரகுநாதபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனி குழுவினை அமைத்து ஜனவரி 7ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.
இது எங்கள் கிராமத்தில் தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அனைவரும் இணைந்து ஒற்றுமையாக ஜல்லிக்கட்டு விழாவினை நடத்தும் நோக்கத்தோடு, நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
ஆகவே ரகுநாதபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும், ரகுநாதபுரம் கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக ஜல்லிக்கட்டு விதமாக ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, மனுதாரர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை, அணுகி தீர்வு காணலாம் என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்