மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் இன்று (ஜனவரி 15) தொடங்கியது. 1,004 காளைகள் பங்கேற்கின்றன. இந்த காளைகளை பிடிக்க 318 மாடுபிடி வீரர்கள் மொத்தம் 8 சுற்றுகளில் களமிறங்குகின்றனர். ஒரு சுற்றுக்கு 25 வீரர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முதல் சுற்று தொடங்கியது.
இந்த போட்டியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதனால் பாதுகாப்புப்பணியில் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவகுழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசும் , சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: தஞ்சையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள்