மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், எம்.எஸ். செல்லப்பா அறக்கட்டளை ஆகியவை இணைந்து மக்களுக்கு மனரீதியான பிரச்னைகளைக் குறைப்பதற்காக, மாணவ தன்னார்வலர்கள் மூலம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதற்காக, என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றுவருகிறது.
இதில், முதலாம் நாளான நேற்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சு. வெங்கடேசன் கூறியதாவது:
கரோனா தாக்கம் மதுரையில் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம், மதுரையில் பல்வேறு துறைகளில் தலைமையில் இருக்கக் கூடியவர்கள். மக்களுக்காக, சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் மதுரையில் அதிகமாக இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் இவ்வாறு பேசுவார்களா என்றால்? பேசுவார்கள் என்பதையும் கூறிவிடுகிறேன். கடந்த 45 நாள்களாக, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அதிக நிதியளிக்க வேண்டும் என்ற உரிமைக்குரலை கொடுத்துவருகிறேன்.
கேரளா, ஜெர்மனி ஆகிய இடங்களில் கரோனா தாக்கம் அதிகமாக இல்லை. அதற்குக் காரணம் பண்பாடு, அரசின் ஒத்துழைப்புதான். பேரழிவு எதிலிருந்தும் வரலாம், ஆனால் உதவி என்பது மனிதனிடம் மட்டுமே வரும். மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசிடம்தான் உள்ளது.
ஆனால், அதைச் செயல்படுத்துவதில், செயல்படாத அரசாக இருக்கிறது. மனிதன் இருக்கும்வரை உதவி இருக்கும். மனரீதியான பிரச்னையை, மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், எதுவும் செய்ய முடியாது. ஆனால் மாணவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்
இதையும் படிங்க: 'சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம்'- இயக்குநர் பா. ரஞ்சித்!