மதுரை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவும், பின்னரும் ஓடுதளம், விமான இயக்கங்களைக் கண்காணிக்கும் கோபுரங்களை ஆய்வுசெய்வதற்காக விமான நிலைய ஊழியர்கள் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்திவந்தனர்.
அதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதால் அதனைக் கட்டுப்படுத்த கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்திலும் முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தால் இயங்கும் ரோந்து வாகனம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
இந்த மின்சார வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என்பதோடு சுற்றுச்சூழல் மாசடைவதும் குறைக்கப்படும் என்பதற்காக, மண்டல விமான நிலைய ஆணையக் குழு நிதியில் புனேவிலுள்ள தனியார் நிறுவனத்திலிருந்து 24 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மின் வாகனங்கள் மதுரை விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் இதனை மதுரை விமான நிலைய திட்ட இயக்குநர் செந்தில்வளவன் அறிமுகம் செய்துவைத்து பயன்பாட்டிற்குத் தொடங்கிவைத்தார். இதன்மூலம் காற்று, ஒலி மாசுபாடு குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.