மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் 110 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உயர் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி, தேர்வுகளுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அக்கல்லூரியின் துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் துணைவேந்தர் கூறும்போது, "மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் உள் தேர்வு (Internal Exam) குறித்து அனைத்துக் கல்லூரி முதல்வர்களுடனும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முடிக்காத பாடத்திட்டங்கள் அனைத்தும் இணையதள வழி மூலமாகவோ, வேறு வழிகளிலோ ஜூன் 2ஆவது வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என அனைத்து முதல்வர்களிடமும் கூறப்பட்டுள்ளது. ஜூன் கடைசி வாரம் தேர்வுகள் நடத்தி, ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நாளை உறுப்புக் கல்லூரி முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மே 21ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள துணைவேந்தர்களுக்கான கலந்துரையாடல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதில் தேர்வுகள், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவது மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, மே 22ஆம் தேதி உயர் கல்வித்துறைக்கு முடிவுகள் அனுப்பப்படும்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், முதலாவது செமஸ்டர் தேர்வு, டிசம்பர் மாதம் இறுதியிலும், இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் மாத இறுதியிலும் நடைபெற்று முடிப்பதற்கான அறிவிப்புகள் உயர் கல்வித் துறை மூலமாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் தொடக்கம்!