மதுரையின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாகத் திகழ்வது மாட்டுத்தாவணியிலுள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையம். இது, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகும். தென் மாவட்டங்களை இணைக்கின்ற பாலமாகவே இந்தப் பேருந்து நிலையம் திகழ்கிறது.
எட்டு நடைமேடைகளுடன் ஒரே நேரத்தில் 96 தடங்களில் பேருந்துகளை நிறுத்தும் வசதி கொண்டது. நூற்றுக்கணக்கான பேருந்துகள் இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்புக் கருதி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் இங்கு இயங்குகிறது. ஆய்வாளர், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என பத்து பேர் பணியில் உள்ளனர். ஆகையால் எந்தவித குற்றச் சம்வம் நடைப்பெற்றாலும் அது உடனடியாக புறக்காவல் நிலையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து பேருந்து நிலைய புறக்காவல் ஆய்வாளர் கண்ணதாசன் கூறுகையில், "தற்போது பண்டிகை காலம் என்பதால் மிக அதிகமான காவல்துறையினர் சீருடையிலும், சாதாரண உடையிலும் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் வலம் வருகின்றனர். இங்கு 36 சிசிடிவி கேமராக்கள் முழு இயக்கத்தில் உள்ளன. அவை அனைத்தையும் ஓரிடத்திலிருந்து தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். பயணிகள் கொண்டுவருகின்ற உடைமைகள் ஏதேனும் தவறிவிட்டால் உடனடியாக அறிவிப்புச் செய்து மீட்கிறோம்" என்றார்.
தற்போது கரோனா காலம் என்பதால் சேனிடைசர், முகக்கவசம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பேருந்துகளிலும், நடைமேடைகளிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதையும் காவல்துறையினர் உறுதி செய்கின்றனர். குற்றச் சம்பவங்கள் குறித்து துண்டறிக்கைகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இதுகுறித்து மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த பயணி கார்த்திகேயன் கூறுகையில், "காவல்துறை இரவு முழுவதும் தொடர்ந்து பரிசோதனைகளில் ஈடுபட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். தனிப்பட்ட நபரின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்கிறார்கள். சந்தேகத்திற்கிடமானவர்களை அழைத்துச்சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். இதனால் பயணிகள் நிம்மதியான பயணம் மேற்கொள்ளமுடிகிறது" என்றார்.
பொதுமக்களின் நண்பனாகவும், அங்கு வியாபாரம் செய்யும் வணிகளுக்கும் தோழனாகவும் காவல்துறையினர் நடந்து கொள்வது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வழிதவறி நிற்கின்ற பயணிகளைக் கண்டறிந்து, அவர்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்கின்ற பணியையும் காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.
தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜா இதுகுறித்து கூறும்போது, "பயணிகள் தங்களின் இயற்கை உபாதைகளைக் கழிக்க, கழிப்பிடங்களுக்குச் செல்வதை கண்காணிப்பு செய்கிறோம். சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து உடனடியாக காவல்துறையிடம் தகவல் அளிக்கிறோம். சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிப்பதும் எங்கள் வேலை. தற்போது பகலில் நான்கு பேர், இரவில் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் பணியில் உள்ளோம்" என்றார்.
குற்ற நடவடிக்கைகளில் இருந்து பயணிகளைப் பாதுகாப்பதுடன், கரோனா கால சூழல்களையும் கருத்தில் கொண்டு மதுரை மாட்டுத்தாவணியிலுள்ள மாநகராட்சி எம்ஜிஆர் பேருந்து நிலையம், 24 மணி நேரமும் மிக சுறுசுறுப்புடன் இயங்குகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுமிடங்களில் இதுபோன்ற பாதுகாப்புப் பணியோடு பொதுமக்களின் நண்பனாகவும் திகழ்வதுதான் நல்ல காவல் பணிக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.
இதையும் படிங்க... கரோனா பரிசோதனையில் மதுரை ராஜாஜி மருத்துவமனை சாதனை