மதுரை விமான நிலையத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து மதுரை வந்த சுரேந்தர் சிங்(50) என்பவர், விமான நிலையத்திலேயே மயங்கிவிழுந்தார். அவருக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் முதலுதவி செய்து சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான ஹரியானா மாநிலத்திற்கு சுரேந்திர சிங் உடலை அனுப்பி வைக்க சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சுரேந்திரனின் உடலுக்கு இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
மேலும், உயிரிழந்த வீரர் உடலுக்கு இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் சதீஸ் குமார், மதுரை விமான நிலைய சிஎஸ்எஸ்எஃப் (CISF ) உதவி கமாண்டண்ட் சனிஸ், மதுரை விமான நிலைய ஆணையர் செந்தில் வளவன், விமான நிலைய ஊழியர்கள் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அணிவகுப்புடன் கூடிய அஞ்சலிக்கு பிறகு சுரேந்திர சிங்கின் உடல் அவரது சொந்த மாநிலமான ஹரியானாவிற்கு இன்று (ஜூன் 12) மதியம் சிறப்பு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியர்களின் டிஎன்ஏ-வில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது: ராகுல் காந்தி