மதுரை: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் கூறியிருப்பதாவது,“வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (FTP) என்பது சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். FTP ஆனது ஏற்றுமதியை அதிகரிக்கவும், வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தவும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தின் வர்த்தக சமநிலையைப் பராமரிக்கும் நோக்கமாகவும் உள்ளது.
2015-2020-ஆம் ஆண்டிற்கான வர்த்தகக் கொள்கை 31, மார்ச் 2023 வரை அமலில் இருந்தது. மேலும், 2022 செப்டம்பரில் அது கடைசியாக நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 1, 2023 முதல் புதிய வர்த்தகக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை ஏற்றுமதியாளர்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் இந்திய தூதரகங்களுக்கு இடையிலான கூட்டாண்மையை அதிகளவில் பயன்படுத்த ஏதுவாக இருப்பதனால், ஏற்றுமதி பெருகவும், வணிகம் மேம்பாடு அடையவும் ஏதுவாகிறது.
அத்துடன், இக்கொள்கையானது ஊக்கத் தொகைகள், ஒருங்கிணைந்த முறையில் ஏற்றுமதி மேம்பாடு, ஏற்றுமதி வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் எலெக்ட்ரானிக் முன் முயற்சிகளை (e-initiatives) அதிகளவில் மேற்கொள்ளுதல், போன்ற 4 அடிப்படைக் காரணிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், 2030-ஆம் ஆண்டிற்குள் நம் நாட்டின் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய முக்கியப் பங்கு வகிக்கும்.
புதிய வர்த்தகக் கொள்கையில் சூரிய அஸ்தமன விதி (Sunset Clause) மற்றும் அதற்கான இறுதிக் காலம் வரையறுக்கப்படாததால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வணிகம் குறித்தான அச்சங்கள் களையப்படுவதோடு, மாறிவரும் புவிசார்-அரசியல் சூழலுக்கு மத்தியில் வணிக ஸ்திரத்தன்மை, மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் உறுதித்தன்மையை ஏற்படுத்தும். இ-காமர்ஸ், இந்திய ரூபாயின் சர்வதேசமயமாக்கல், மாவட்ட ஏற்றுமதி மையம், வணிக வர்த்தகம், சீர்திருத்தம் மற்றும் சிறப்பு ஒரு முறை பொதுமன்னிப்பு திட்டங்கள் போன்ற புதிய வழிமுறைகள், இக்கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுமதி வர்த்தக சூழலை வலுப்படுத்துவதோடு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), உலகளாவிய மதிப்பு சங்கிலிகளில் ஒருங்கிணைக்க பெரிதும் உதவும், மேலும் நம் நாட்டின் ஏற்றுமதி திறனையும் மேம்படுத்தும். இந்தியாவின் பாரம்பரிய தயாரிப்புகளை உலகளாவிய பிராண்டுகளாக நிறுவ வழி வகுக்கும், இதனால் ஏற்றுமதி வணிகம் எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும்.
பல்வேறு திட்டங்களின் கீழ் ஏற்றுமதி ஒப்புதல் பெறுவதற்கான தொழில்நுட்ப வசதிகளை, தாமதமின்றி உடனுக்குடன் வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், ஏற்றுமதி தொழிலை எளிதில் துவங்க வழி வகுக்கும். ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித் துறைக்கு சிறப்பு முன்கூட்டிய அங்கீகாரத் திட்டத்தை விரிவுபடுத்தியதன் மூலம் ஏற்றுமதி ஆர்டர்கள் உடனுக்குடன் அனுப்ப உறுதி செய்யப்படுவதால், ஏற்றுமதி ஒப்புதல் அங்கிகாரம் பெறப்படும் அதிகப்படியான கால தாமதங்கள் தவிர்க்கப்பட்டு, சரக்குகளை விரைவாக ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்படும்.
ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனப் பொருட்கள் (Export Promotion Capital Goods-EPCG) திட்டத்தின் கீழ் பெறப்படும் உரிமத்தினைப் பெறுவதற்கான கால அளவினை 1 நாளாகக் குறைத்தல், இ.பி.சி.ஜி முன் அனுமதி தளத்தை மறுசீரமைத்தல் மற்றும் ஏற்றுமதிக்கான விண்ணப்பங்களை காகிதமில்லா முறையில் தாக்கல் செய்தல் போன்ற நடைமுறைகளுக்கான கால நேரத்தை வெகுவாக குறைக்க இத்திட்டதின் மூலம், மேம்பட்ட நிர்வாகத்திற்காக எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள், ஏற்றுமதியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
வணிக ஒத்துழைப்பு, அதிக வர்த்தக வசதிகள் மற்றும் வளர்ந்து வரும் துறைகளான இ-காமர்ஸ், பசுமை தொழில்நுட்பம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், ஊக்கத்தொகையிலிருந்து வரி விலக்கு, ஏற்றுமதி மேம்பாட்டிற்கு மாறுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த அணுகுமுறையை இந்த புதிய வர்த்தகக் கொள்கை கொண்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் அதிகளவிலான ஏற்றுமதிக்கு தொழில், வணிகத் துறையின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும்.
இருப்பினும், இப்புதிய FTP கொள்கை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சேவைத் துறையை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்தியாவிலிருந்து சேவைகள் ஏற்றுமதி திட்டத்திற்கு மாற்றாக, புதிய திட்டத்தின் கீழ் விருந்தோம்பல், விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சேவை ஏற்றுமதியாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், சேவை ஏற்றுமதிக்கான புதிய ஊக்குவிப்புத் திட்டம் எதுவும் இக்கொள்கையில் அறிவிக்கப்படாதது மிகவும் வருந்தத்தக்கது. உற்பத்தித் துறைகளுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்தை அரசாங்கம் வழங்கும்போது 2022-23-ஆம் ஆண்டில், சுமார் 325-350 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஏற்றுமதியை மேற்கொண்டுள்ள சேவைத் துறையை ஏன் மத்திய அரசாங்கம் ஓரங்கட்ட வேண்டும்?”என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.