மதுரை: சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த “இந்தியாவின் சமூக நீதி” பெருவிழா மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் அமைச்சர் பி.டி.ஆர். பேசுகையில், “சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படாமல் உள்ளது.
சமுதாயத்தை மாற்றுவதற்கு, அரசு ரீதியாக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். பிராமணர்கள் மட்டும் படித்திருந்ததால், அவர்களே அர்ச்சகர்களாக கருவறைக்குள் இருந்தார்கள். தற்போது திமுக ஆட்சியில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
சமூக எண்ணிக்கையில் வெறும் 3% உள்ள சாதியினர் எப்படி, அனைத்து அரசுப் பணிகளிலும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினார்கள்? அவர்களே அர்ச்சகர் தொழிலை விட்டுவிட்டு சட்டம், மருத்துவம், அரசுப்பணிகள் உள்ளிட்ட பிற உயரிய பணிகளுக்கு சென்ற பின்னர், பிற சமூகத்தினர் மட்டும் எப்படி குல தொழிலை தொடர்ந்து பின்பற்ற முடியும்? இதன்படி குல தொழிலை ஒழிப்பதற்கு அவர்களே நமக்கு பாதையை காண்பித்து உள்ளார்கள்" எனக் கூறினார்.
தொடர்ந்து திருமாவளவன் பேசுகையில், "அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் எதிரானது சனாதனம். இந்தியாவில் பாசிசம் என்ற சொல் தான் சனாதனம் என்ற இன்னொரு சொல்லாக உள்ளது. சனாதனம் என்றால் தொடக்கம் இல்லாதது, அழிவு இல்லாதது, மாறாதது, நிலையானது என்பது பொருள்.
வேத பரம்பரையினருக்கும், இந்தியாவின் பூர்வ குடியினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆரியர்களுக்கும், வேதத்திற்கும் தான் சம்மந்தம் இருக்கிறது. ஆரியர்களின் வாழ்வை தொகுப்பதற்காக எழுதப்பட்ட ஒரு நூல் தான் மனுஸ்மிருதி. மனுஸ்மிருதிக்கு எதிராக எழுதப்பட்டது தான் அரசியலமைப்பு சட்டம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சட்டத்திற்கு மாற்றாக எழுதப்பட்டது தான் அரசியலமைப்பு சட்டம். மனுஸ்மிருதி சட்டம் சனாதனம் பேசுகிறது. அரசியலமைப்பு சட்டம் ஜனநாயகம் பேசுகிறது.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது தான் சனாதனம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உருவாக்கியவர்கள் சித்பவன் என்ற மகாராஷ்டிரா பிராமண சாதியினர். அது பிராமண சங்கம் தான். பிராமண சாதிக்குள் கூட சமத்துவம் கிடையாது. சனாதன தர்மத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பிராமண பெண்கள் தான்.
பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு நிலையானது என சனாதனம் சொல்கிறது. இந்தியாவில் சமத்துவமும், சகோதரத்துவமும் இல்லாத ஒரு மதம் இந்து மதம் மட்டுமே. சாதிகளின் பெயரால் சமூகத்தை தனித்தனி தீவுகளாக பிரித்து வைத்திருப்பதன் பெயர் தான் சனாதனம். உலகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரானது ஜனநாயகம். இந்தியாவில் சனாதனத்திற்கு எதிரானது ஜனநாயகம்.
பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இல்லையென்று சொன்னால், இந்து மதத்தை தூக்கிக் கொண்டாட தயார். பெரியார் பஞ்சமர்களை விட சூத்திரர்களை பற்றி தான் அதிகம் கவலைப்பட்டார். திருமாவளவனை விட மோடி, அமித்ஷாவை பற்றித் தான் அதிகம் கவலைப்பட்டார் பெரியார்.
இந்தியா கூட்டணிக்குள் உள்ள இந்து பற்றாளர்களை பிரித்து இழுக்க மோடி முயற்சிக்கிறார். இந்தியாவின் பெயரை இந்து ராஷ்டிரம் என மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். நோக்கம். சனாதன தர்மத்தை அரசின் தர்மமாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் கண்டெடுப்பு; சாலைப் பணியால் அழியும் அவல நிலை!