சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மருத்துவ மாணவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் நான் 382 மதிப்பெண்களை பெற்று இந்திய அளவில் 6 ஆயிரத்து 704ஆவது இடத்தை பிடித்திருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னர் அதிகாரிகள் திருப்தி அடைந்ததன் பேரிலேயே இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேர்ந்தேன். தீவிர மனநலப் பிரச்னை மற்றும் மன அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி செப்டம்பர் 12ஆம் தேதி படிப்பை நிறுத்த முடிவெடுத்தேன்.
செப்டம்பர் 17ஆம் தேதி ஊடகங்களில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக செய்தி வெளியானது. அவர்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்று செல்போனில் எடுக்கப்பட்டது மற்றொன்று ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. ஆகவே, இரு புகைப்படங்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலும் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் என் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் 20 வயதே நிரம்பியவர் என்பதால், கைது செய்யப்பட்டால் எனது எதிர்கால வாழ்வு வீணாகும் நிலை உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை குழுவினரிடமும் உள்ளது. அதோடு வழக்கு தொடர்பாக எல்லாவித ஒத்துழைப்பையும் வழங்க உறுதி கூறுகிறேன். ஆகவே தேனி கண்டமனூர்விலக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சிபிசிஐடி முன்பாக ஒருநாள் ஆஜராகி விளக்கமளிக்க முடியுமா? என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வழக்கு மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் சிபிசிஐடி முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க அறிவுறுத்தினார்.
அவ்வாறு ஆஜரானால், கைது செய்யப்பட்டால் அவரின் முன்ஜாமின் மனுவை, ஜாமின் மனுவாக விசாரிக்க தயார் என தெரிவித்த நீதிபதி இந்த வழக்கு மிகவும் முக்கியமானது, உண்மைத்தன்மை வெளிவர வேண்டும். வழக்கில் போதிய முகாந்திரமும் உள்ளது. இருப்பினும் மனுதாரர் மனநலப்பிரச்னை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் அவரின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பும் வழங்கப்படுகிறது என தெரிவித்து வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.