விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின், தற்போது எங்கள் பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்கள், எங்கள் ஊரில் உள்ள கீழ ராஜ குலராமன் கண்மாயை நம்பியே உள்ளன. இந்தக் கண்மாயின் முழு கொள்ளளவான 11 அடியில் தற்பொழுது 3.50 அடி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் எங்கள் பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவராக உள்ள ராமராஜ் மற்றும் துணைத் தலைவராக உள்ள சுப்பிரமணி ஆகிய இருவரும் குடிமராமத்து பணி என்ற பெயரில் கரைகளை உடைத்து கண்மாயில் உள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். இவர்கள் தண்ணீரை வெளியேற்றி கண்மாய்க்குள் இருக்கும் மணலை அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் கிராமத்தில் அறுவடை பணிகள் பாதிப்பதுடன் தற்பொழுது வளர்ந்துள்ள பயிர்களும் சேதமடையும் அபாயம் உள்ளது. இந்த கண்மாய் கரையை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றி மணல் அள்ளுவதற்கு இருக்கன்குடி பொதுப்பணித்துறை அலுவலர்களின் துணையுடன் இந்த சட்டவிரோதமான வேலையை செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க விருதுநகர் ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இது குறித்து விருதுநகர் ஆட்சியர் விசாரித்து எட்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.