மதுரை: திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலால் தமிழ்நாட்டின் அரசியல் களம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னனை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, "வருகின்ற 20ஆம் தேதிக்குள் திமுகவில் எங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் நிபந்தனை இன்றி இணைவதற்கு தயாராக உள்ளோம். எங்களுக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் கிடையாது. ஆனால், எங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளாவிட்டால் தனிக்கட்சி தொடங்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதன் விளைவாக திமுக தமிழ்நாடும் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ நேரிடும். வேறு எந்த கட்சியிலும் நாங்கள் இணையத் தயாராக இல்லை" என்றார்.
இதையும் படிங்க: மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையா..? - பரபரக்கும் தேர்தல் அரசியல் களம்