மதுரை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளர் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து அந்த தொகுதிக்குட்பட்ட சீமான் நகர் பகுதியில் நடிகை நமீதா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ’வணக்கம் மச்சான்ஸ்’ எனக்கூறி அவர் பேசத் தொடங்கவே, மறுமொழியாக அங்கிருந்தவர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.
தொடர்ந்து நடிகை நமீதா பேசியதாவது: ”வேட்பாளர் சரவணன் தனது ட்ரஸ்ட் மூலமாக 20 ஆண்டுகளாக சேவை ஆற்றிவருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியுள்ளார். 350 அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்ய உதவியுள்ளார். ஒன்றுமில்லாத கட்சியில் நிறைய செய்த சரவணன், பாஜகவில் இணைந்ததால் இனி மோடி போல உதவுவார்.
தாமரைக்கு ஓட்டு போட்டால் என்ன லாபம் என சொல்கிறேன், அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள். தாமரைக்கு ஓட்டு போட்டால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வீடு தேடி வரும். ஆறு சிலிண்டர்கள் தருவோம். பிரியாணி செய்து சாப்பிடலாம். என்னையும் கூப்பிடுங்கள். ஆனால், வெஜ்டேரியன் பிரயாணி தான் வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூபாய் ஆயிரத்து 500 தருவோம். இடம் இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தருவோம். மேலும் வீட்டில் ஒரு நபருக்கு அரசு வேலையும், இலவச வாஷிங்மெசினும் தரப் போகிறோம். இலவச கேபிள் மூலம் உங்களுக்குப் பிடித்த சீரியலை பார்க்கலாம். அதனால் தாமரைக்கு ஓட்டு போடுங்கள். மதுரையில் தாமரை மலரும், தமிழகம் வளரும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: 'ஜோதிமணி அக்கா எம்பி பதவியை ராஜினாமா செய்யணும்’ - அண்ணாமலை