மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "வெளிப்படைத்தன்மை அரசிடம் இல்லை. மக்கள் பீதியடைவார்கள் என நினைக்கின்றனர். திமுக ஆட்சியில் தான் மரண எண்ணிக்கை கூடியுள்ளது. எங்கள் ஆட்சிக் காலத்தில் நோயாளிகளே இல்லையே! அதிமுக ஆட்சியில் நோயாளிகள் இல்லையென்பதால் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தது.
’மதுரைக்கு குறைவான தடுப்பூசிகள் விநியோகம்’
மதுரைக்கு கரோனா தடுப்பூசி குறைவாக வந்துள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதிக அளவு ஊசிகளைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடங்கள் பல திறக்காமல் உள்ள நிலையில், அங்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா தொற்று குறைந்துள்ளது. ஊரடங்கு ஓரளவு கைகொடுத்துள்ளது. பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கூடுதலாக 5,000 ரூபாய் கொடுக்க முதலமைச்சர் முன்வர வேண்டும்.
'திமுக ஆட்சிக்கு தேனிலவே முடியவில்லை, அதற்குள் ரவுடியிசம்’
திமுக ஆட்சிக்கு வந்தால் அலுவலர்களுக்கு மிரட்டல், உருட்டல் இருக்கும் என எல்லாருக்கும் தெரியும். எங்கள் ஆட்சியில் அலுவலர்களிடம் நாங்கள் எந்தப் பிரச்னைக்காகவும் நேரிலோ, தனிப்பட்ட முறையிலோ பேச மாட்டோம். தற்போது திமுக பிரமுகர் தலையீட்டால் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். இது ’ரவுடியிசம்’ தலைதூக்குவதற்கான ஆரம்பம். திமுக ஆட்சிக்கு தேனிலவே முடியவில்லை, அதற்குள் ரவுடியிசம் தலைதூக்குகிறது.
’ஈபிஎஸ் ஒபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி’
அரசின் ஆலோசனைக் கூட்டங்களில் கட்சிக்கு ஒருவர் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஈபிஎஸ் ஒபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி. எங்களுக்குள் எதுவும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யாமல் சி.டி. ஸ்கேன் செய்வோரின் விவரத்தை தெரிவிக்க உத்தரவு