மதுரை: மதுரையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியலினத்திலிருந்து வெளியேற்றுவதற்கான அரசாணையை வெளியிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கிருஷ்ணசாமி, தனித்தொகுதிகளில் வெற்றி பெறும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு ஒரு பிரச்னை என்றால் வரமாட்டார்கள், ஆனால், பதவி ருசிக்காக அவர்களது கட்சியில் அடிமைகளாக இருந்து வருகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக எதனையும் இழக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், தேவேந்திர குல வேளாளர் பட்டியலின வெளியேற்றத்தால் யாருடைய இட ஒதுக்கீட்டிற்கும் இடையூறு இல்லை, தேவேந்திர குல வேளாளர் எனப் பொதுப்பெயர் அரசாணை வெளியிட்டு 6 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.
மேலும், "பட்டியலின வெளியேற்றத்தை அறிவிக்காமல் முதலமைச்சர் பரப்புரைக்கு செல்வதை ஏற்கமுடியாது.
தேவேந்திர குல வேளாளர் உள்பட 7 உள்பிரிவினை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைப்பதாக முதலமைச்சர் கூறுவது பாதிக்கிணற்றைத் தாண்டுவது போன்ற செயல்.
பட்டியலின வெளியேற்றம் குறித்த அரசாணை வெளியிட்டு அதனை மத்திய அரசுக்கு அனுப்பும் வரை நான் முதலமைச்சரை நேரில் சந்திக்கமாட்டேன். தேவேந்திர குல வேளாளர் என்றாலே தமிழ் தேசியமும், கம்யூனிசமும் சேர்ந்ததுதான். புதிய தமிழகம் கட்சி 40 சட்டப்பேரவை தொகுதிகளில் தனியாக நின்று வெல்லும் நிலையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கோரி ஜான் பாண்டியன் போராட்டம்