மதுரை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் இலட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று (ஆக. 14) அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், நிதியமைச்சர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காரில் சென்று கொண்டிருந்தபோது, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைச்சரின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவிடம் அமைச்சர் கேட்ட கேள்வி: இதைத் தொடர்ந்து, மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் நிதியமைச்சர், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இல்லத்திற்கு நேற்று (ஆக. 13) நள்ளிரவில் சென்று அவரை சந்தித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் அவர், "இன்று (அதாவது நேற்று) காலை பாஜக சார்பாக நானும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ராணுவ வீரர் இலட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்திற்கு சென்றிருந்தோம். அப்போது நிதி அமைச்சர் வரும்போது, எங்களிடம் 'என்ன தகுதியில் இங்கு வந்துள்ளீர்கள்' என்று கேட்டார்.
'திமுக என் தாய் வீடு': மேலும், பாஜகவினர் ராணுவ வீரரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்துமாறும் அமைச்சர் கூறினார். பிறகு அமைச்சருக்கு நிகழ்ந்த சம்பவத்தால் எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால், நேரில் வந்து அமைச்சரிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பையும் கேட்டுக்கொண்டேன். பாஜக தொண்டர்கள் கட்டுப்பாடு இழந்து, இப்படி நடந்து கொண்டது வேதனையை தருகிறது. இதுபோல துரதிஷ்டவசமான அரசியலை செய்ய விரும்பவில்லை. என்னுடைய மன்னிப்பை தொண்டர்கள் சார்பாக அமைச்சரிடம் கேட்க வந்தேன்.
மன உளைச்சலோடுதான் பாஜகவில் பயணித்து வந்தேன். ஆளுங்கட்சி அமைச்சர் மீது இப்படி ஒரு தாக்குதல் என்பது மன வருத்தம்தான். நான் இனி பாஜகவில் தொடரப்போவதில்லை. நாளை (அதாவது இன்று) என்னுடைய ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளேன். திமுகவில் இணைவதற்கு எந்த ஒரு முடிவும் நான் எடுக்கவில்லை. அப்படி முடிவு எடுத்தாலும் எந்தவித தப்பும் இல்லை, திமுக எனது தாய்வீடு. நான் 15 ஆண்டுகளாக உழைத்த கட்சி, திமுக" என்றார்.
மேலும், அவரின் அடுத்த கட்ட நகர்வு குறித்த கேள்விக்கு,"நான் டாக்டர் படித்துள்ளேன், டாக்டர் தொழிலை பார்ப்பேன். பாஜகவில் எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு உள்ளது. மத அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு