மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தாநகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (42). ஆட்டோ ஒட்டுநரான இவர் தனது மனைவி உஷாராணி, (36) சித்தார்த் (6), கோப்பெருஞ்சோழன் (8) ஆகியோருடன் பாலமேட்டில் வசித்துவந்துள்ளார்.
குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த மஸ்தூர் பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டுவந்ததாகவும், இதனை பலமுறை குமார் கண்டித்தும் அந்த உறவை உஷாராணி கைவிட மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 21) காலை வழக்கம்போல் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த குமார் தனது இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கோயில் வளாகத்தில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் குருனை மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து, தனது மகன்களுக்கும் கொடுத்துள்ளார். இதனை மூவரும் குடித்துவிட்டு உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் மூவரையும் மீட்டு பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் சித்தார்த் (6) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மற்றொரு மகனான கோப்பெருஞ்சோழனும் (8) உயிரிழந்தார். குமார் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க... ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத விரக்தி: மாணவி தற்கொலை முயற்சி