மதுரை: ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வந்த தனியார் குழந்தைகள் காப்பகத்தில், குழந்தை இறந்ததாக போலியான ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, நிர்வாகி மாதர்ஷா, இடைத்தரகர்கள், குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகள் ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இதயம் அறக்கட்டளை உரிமம் ரத்து செய்யப்பட்டு காப்பகம், உதவி மையம் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்தது. மேலும் இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் செல்வகுமார், மதுரை வடக்கு வட்டாட்சியராக இருந்த முத்துவிஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் என 4 பேரும் மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கங்களை அளித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கின் புகார்தாரரான சமூக ஆர்வலர் அசாருதீன், சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, நரிமேடு மாநகராட்சி மருத்துவமனை மருத்துவ அலுவலர், வடக்கு மண்டல மருத்துவ அலுவலர், குழந்தைகளின் தாயார் ஐஸ்வர்யா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர், மதுரையில் இன்று (ஆக.10) நடைபெறும் விசாரணையில் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளரும் விசாரணை அலுவலருமான சுந்தரேசன் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
மனித உரிமை ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட நோட்டிஸை அடுத்து அனைவரும் தற்போது வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (ஆக. 10) மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரும், நாளை (ஆக. 11) மனித உரிமை ஆணைய தலைவர் என மதுரை மத்திய சிறைச்சாலை, குழந்தையின் தாயார் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.