சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் இந்த இரு மரணங்கள் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது உண்மை இல்லை. வயதான தந்தை ஜெயராஜை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். எதற்காக அழைத்துச் செல்கிறோம் என்பதை காவல்துறையினர் அவர்களுடைய உறவினர்களிடம் கூறவில்லை.
காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜை போலீசார் சித்திரவதை செய்கிறார்கள். தந்தையை ஏன் அடித்தீர்கள் என்று கேட்கப் போன மகனையும் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். அவ்வாறு செய்வதற்கு காவலர்களுக்கு கட்டளையிட்டவர் அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர் என்பவர்தான்.
குற்றஞ்சாட்டப்பட்டு அந்த காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் நபர்களை சித்திரவதை செய்வதற்கென்று பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று சொல்லப்படுகின்ற நபர்களை பயன்படுத்துகிறார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வைத்து அடித்துப் பழகிக் கொள்ளுங்கள் என்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆசனவாய் வழியாக இரும்புக் கம்பியை நுழைத்து அவர்கள் இருவரையும் சித்திரவதை செய்துள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இதே பாணியிலான சித்தரவதைகள் செய்யப்பட்ட குற்றச்சாட்டு பிற வழக்குகளிலும் இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் உள்ளூர் நீதிபதி சரவணனும் குற்றவாளியே. உடலிலுள்ள காயங்களைப் பார்த்த பிறகாவது அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நீதிபதி சரவணன் உத்தரவிட்டு இருக்க வேண்டும். அந்த காவல் நிலையத்தில் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 2 உதவி ஆய்வாளர்களுக்கு ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் தொடர்பு உண்டு.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பேசாதீர்கள் என்று சொல்கிறார்கள். நாங்கள் வெகுஜன ஊடகங்களில் இது குறித்து பேசுகிறோம். காரணம் உண்மை வெளியே வர வேண்டும். இவ்வாறு பேசினால்தான் நீதிமன்றத்தின் கண்களுக்கும் காதுகளுக்கும் இது சென்று சேரும்.
கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி 9 கிறிஸ்தவ பாதிரியார்களை அடித்து சித்திரவதை செய்தார்கள். இதனை தட்டிக்கேட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவரையும் துன்புறுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் என்று ஒருவர் இருக்கிறார என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்காது.
இந்தச் சம்பவங்களில் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலுக்கும் பங்கு இருக்கிறது. பிற எல்லா வழக்குகளையும் போல உயர் நீதிமன்றம் சொல்லும் வரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கக்கூடாது. அண்மையில் கொண்டுவரப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சாட்சி பாதுகாப்புத் திட்டம் 2018(witness protection scheme)ன் படி ஜெயராஜ் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நீதிமன்றமும் இதில் உரிய நீதியைப் பெற்று தர வேண்டும். குற்றவியல் பிரிவு 302ன் கீழ் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும். நீதித்துறை நடுவர், சிறைப் பொறுப்பாளர், மருத்துவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: சிசிடிவி காட்சியை சமர்ப்பிக்க உத்தரவு!