மதுரை வருவதற்காக ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த அண்ணல் காந்தி, விவசாயிகள் அரைநிர்வாண உடை அணிந்திருப்பதை பார்த்தார். வறுமையில் வாடித் தவிக்கும் இந்த பாமர மக்களில் தானும் ஒருவன்தானே என்று நினைத்த காந்தி அன்று முதல் தானும் அரை உடையை உடுத்த முடிவுசெய்தார்.
1946-ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3ஆகிய தேதிகளில் பட்டியலின மக்கள் வழிபடுவதற்காக மீனாட்சி அம்மன் கோவில் திறக்கப்பட்டபோது , அவர்களுடன் இணைந்து அண்ணல் காந்தியடிகள் வழிபாடு செய்தார். அப்போது மதுரையில் சிவகங்கை மன்னருக்கு சொந்தமான மாளிகையில் தங்கினார் .
அந்த மாளிகை தற்போது மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ளது. மீனாட்சி கல்லூரியின் வரலாற்றுத்துறை சிவகங்கை மன்னர் மாளிகை அருகே உள்ள கட்டடத்தில் தான் தற்போது இயங்கிவருகிறது. அவ்வப்போது மாணவர்களுக்கு வகுப்பெடுக்க காந்தியடிகள் தங்கிய இந்த வீட்டையும் பயன்படுத்திவருகிறது.
இந்நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக காந்தி தங்கிய அந்த மாளிகை அகற்றப்படவுள்ளது என தகவல் பரவியது. இதுகுறித்து அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் லட்சுமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "காந்தியடிகள் தங்கிய அக்குறிப்பிட்ட வீடு எங்களது வரலாற்றுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளது. அதனை சீரமைத்து செம்மைப்படுத்த கல்லூரி கல்வி இயக்குநரகம் திட்ட அறிக்கை ஒன்றை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளோம்.
அதற்கு ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கான உரிய நிதியை பெற்று அந்த வீட்டை பாதுகாக்க மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. வரலாற்று பாரம்பரியமிக்க அந்தக் கட்டடத்தை இடிக்கும் எண்ணம் எங்களுக்கு ஒரு போதும் இல்லை". என்றார்
இதையும் படிங்க: 2025ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தில் 50% பெண் ஊழியர்கள்: ட்விட்டர் முடிவு