மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்," தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உடற்கூராய்வுகள் நடக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில்தான் உடற்கூராய்வுகள் செய்ய வேண்டும்.
மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். விதிப்படி, உடற்கூராய்வுகள் நடத்தப்பட்ட தினமே அதன் அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களே உடற்கூராய்வுகள் செய்கின்றனர். ஆனால், மருத்துவர் முன்னிலையில் நடந்ததாக அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றனர்.
உடற்கூராய்வுகள் அறிக்கையை ஒரு மாதத்திற்குப் பிறகு, நீதிமன்றத்திற்கு அனுப்புவதால் காலவிரயமும், உடற்கூராய்வில் சந்தேகமும் ஏற்படுகிறது. உடற்கூராய்வுகள் அறைகளில் காணொலி பதிவு செய்ய வேண்டுமெனக் கடந்த 2008ஆம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு நேற்று (அக்.12) வந்தது. விசாரணையில், மருத்துவ விதிப்படி உடற்கூராய்வு முடித்து மாஜிஸ்திரேட் மற்றும் துறைத் தலைவருக்கு அறிக்கையளிக்க வேண்டும். தவறும் மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கலாம். இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டல்படி உடற்கூராய்வுகள் அறிக்கை இருத்தல் வேண்டும்.
மருத்துவமனை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் வந்து செல்வது பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையில் இருக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வேண்டுகோள்படி உடற்கூராய்வுகள் காணொலி பதிவு செய்ய வேண்டும். பிணவறை மற்றும் உடற்கூராய்வுகள் கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி பொருத்தி இருக்க வேண்டும். அவை எல்லா நேரமும் இயங்க வேண்டும்.
உடற்கூராய்வுகள் செய்வதற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இருப்பதை 6 மாதத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும். ஹரியானா மாநிலத்தைப் போலத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவ மனைகளிலுள்ள மருத்துவர்கள், சுகாதார நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளும் அனைத்து விதமான விவரங்களை இணையத்தளம் அடிப்படையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அறிவியல் அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். தடயவியல் நிபுணர் குழு அமைத்து அறிவியல் அலுவலரின் தகுதி மற்றும் பணி உள்ளிட்டவற்றை வரையறுக்க வேண்டும். இதற்கான நிபுணர் குழுவை ஓராண்டிற்குள் அமைக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்: தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு