சென்னை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் தங்களது பிறந்தநாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் அறிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பொறுப்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் உள்ளார்.
இவர், தென் மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை அலுவலர், காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்கப்படும் என்றும், காவலர்களின் பிறந்த நாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா போன்ற பேரிடர் காலங்களில் காவல்துறையின் பணி அளப்பரியது. நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிவோருக்கு விடுமுறை கிடைப்பது கூட மிக அரிதான ஒன்றாகும். இந்நிலையில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் இந்த அறிவிப்பு காவல் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.