மதுரை தல்லாகுளத்தில், ஏழை எளிய மாணவர்கள் அரசு தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் மதுரை வடக்கு சட்டப்பேரவை நிதியின் கீழ் ரூபாய் எட்டு லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நூலகத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர ஆணையாளர் விசாகன், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா உட்பட அரசு அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஏழை எளிய மாணவர்கள் உட்பட அனைவரும் நீட் உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு படித்துப் பயன்பெறும் வகையில் அனைத்து விதமான புத்தகங்களும் அமைந்துள்ள வகையில் நூலகம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, மாணவர்கள் அனைவரும் நூலகத்தைப் பயன்படுத்தி திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்தி பாடம் திணிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த செல்லூர் ராஜு, "மத்திய அரசு இப்போது தான் அமைச்சரவையை அமைத்துள்ளது. அதற்குள் நாம் அதைப்பற்றிப் பேசக் கூடாது, அது வந்த பிறகு பார்த்துக் கொள்வோம் இதைப்பற்றி எல்லாம் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்கு வங்கி பறிபோனதற்கு காரணம் பாஜக அல்ல; அதிமுகதான் என்று கூறியது பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் கேள்விக்கு எல்லாம் நான் பதில் கூற விரும்பவில்லை, தற்போது உண்மை உறங்கிவிட்டது பொய்கை ஊர்வலம் வந்துவிட்டது" என்று கூறினார்.