மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "பாளையங்கோட்டை முதல் அருப்புக்கோட்டை வரை மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு தனியார் நிறுவனம் இதற்கான வேலைகளைத் தொடங்க உள்ளது.
பாளையங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியின் இடையே உள்ள நாகையாபுரம் பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்படவுள்ள பாதையில் பேருந்து நிலையம், கோயில், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் உள்ளன.
இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்
இப்பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதன் மூலம் பல விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். உயர் மின்னழுத்த கோபுரத்தை மாற்றுப்பாதையில் அமைப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மனுவில் பொதுநலம் இல்லை
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாநில நெடுஞ்சாலை ஓரங்களிலேயே உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வழக்கை மனுதாரர் உள்நோக்கத்துடன் தாக்கல்செய்ததாகத் தெரிகிறது. இந்த மனுவில் பொதுநலம் இல்லை எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விரட்டும் வழக்குகள்... மீரா மிதுன் மீண்டும் கைது!