மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழகத்தில் 24 அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரேத பரிசோதனைகள் செய்யபடுகின்றன. இவை அனைத்தும் தடய அறிவியல் நிபுணர்கள் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யபட வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மருத்துவகல்லூரிகளில் மட்டுமே தடய அறிவியல் நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக மருத்துவ குறியீடு விதி 621ன் படி பிரேத பரிசோதனை நடத்தபட்ட அன்றைய தினமே பிரேத பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதிக்கு அனுப்ப வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர். ஆனால் மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்ததாக அறிக்கை தருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையை ஒரு மாதம் கழித்து தொடர்புடைய குற்றவியல் நீதித்துறைக்கு அனுப்புகின்றனர். இதனால் காலவிரயம், பிரேத பரிசோதனையில் சந்தேகம் ஏற்படுகின்றது. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளால் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் 2008 பிப்ரவரி 16 ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பின்பற்றவில்லை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என 2008 ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே, அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த தடயவியல் துறை அலுவலர், லோகநாதன் நேரில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதிகள், அவர்களது பணி என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இதுவரை இதுதான் எங்களது பணி என வரையறுத்து கூறப்படவில்லை. மருத்துவர்கள் வழங்கும் பணியினை செய்து வருகின்றோம் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் மருத்துவ தடயவியல் துறை அலுவலர்களின் பணி என்ன? அந்த பணிக்கான கல்வித் தகுதி என்ன? என கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள் பிரேத பரிசோதனை சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? என கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தில் ஆஜரான தடயவியல் துறை அலுவலர் லோகநாதன், சில வழக்குகளில் குற்றங்களை மறைப்பதற்காக தாமதமாக பிரேத பரிசோதனை சான்று வழங்கப்படும். ஒரு சிலருக்கு மட்டும் அவ்வாறு வழங்கினால் சந்தேகம் வரும் என்பதற்காக பொதுவாகவே பிரேத பரிசோதனை சான்று தாமதமாக வழங்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான மருத்துவர்கள் வேலைக்கு வருவதில்லை, ஒருவர் வேலைக்கு வந்தால் கூட அவரே அனைவருக்கும் கையொப்பம் இட்டு விடுவார்.
பிரேத பரிசோதனை சான்றுகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. எல்லாமே cut copy paste என தெரிவித்தார். அதேபோல ஒரு சில வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ கூட மருத்துவமனையில் இருக்கும் தடயவியல் துறை அலுவலர்களை விசாரிப்பதில்லை என தெரிவித்தார். மேலும் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறினார்.
இதற்கு நீதிபதிகள் சென்னையிலேயே ஏழுக்கும் அதிகமான அரசு மருத்துவமனைகள் உள்ள நிலையில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையில்லை என்ற நிலையிலேயே தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருக்கையில் அரசு மருத்துவமனைகளில் தானமாகப் பெறப்படும் உடலுறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது எப்படி? கேள்வி எழுப்பியதோடு வழக்கை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.