மதுரை: மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஏடிஎம் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவரது மனைவி ராஜம்மாள், கொலை செய்யப்பட்ட தனது கணவனின் உயிரிழப்புக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் , “எனது கணவர் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் தனிச்சியம் ஏடிஎம்மில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள், காவலாளியாக இருந்த எனது கணவனை கொலை செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
நான், எனது கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்தேன். எனது கணவர் இறப்பால், எனது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், எனக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
ரூ. 3 லட்சம் இடைக்கால நிவாரணம்
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 8 வருடங்களாக வழக்கு விசாரணையில் உள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள ராஜம்மாளுக்கு 3 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை, 4 வாரங்களுக்குள் விசாரித்து முடித்து, வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து தீர்ப்பில் குறிப்பிடவும், தீர்ப்பு நிறைவேற்றம் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்திற்கு சீல் வைப்பு