மதுரையில் திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அண்ணாநகர் 80 அடி சாலையில் அதிகமான மருத்துவமனைகள், கணினி மையங்கள் உள்ளன. மிகவும் பரபரப்பான இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதோடு, நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வந்து பயிலக்கூடிய நிலை உள்ளது.
ஏற்கனவே அது தொடர்பான முறையீட்டின் அடிப்படையில் நீதிமன்றம் தானாக முன்வந்து அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியிலிருந்து சில மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் விற்பனை நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை அண்ணாநகர் 80 அடி சாலையில் டாஸ்மாக் விற்பனை நிலையம் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: முதன்முறையாக மூடப்பட்ட பழமைவாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்கா!