மதுரை: ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், "ராஜபாளையம் நகராட்சிக்குச் சொந்தமான பகுதியில் மூன்று மயானங்கள் ராஜூஸ் இன மக்களுக்காகச் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் இதே பிரிவில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களை, இங்கு தகனம்செய்ய அனுமதிப்பதில்லை.
அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
மேலும் நகராட்சியில் செயல்படும் ஆறு தனியார் மயானங்களில், நான்கு மயானங்கள் நகராட்சிப் பதிவேட்டில் குறிப்பிடப்படாமலேயே இயங்கிவருகின்றன. மேலும் நகராட்சி, ஊராட்சி, தனியாருக்குச் சொந்தமான மயானங்களில் உரிய பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை.
குறிப்பாக தகனம் செய்யப்படும் உடல்களின் விவரங்கள் குறித்த பதிவேடுகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
இது கரோனா காலகட்டத்தில் தேவையற்ற விளைவுகளை உருவாக்கும். அதனால் மயானங்களை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும்விதத்தில் அடிப்படை வசதிகளுடன் தூய்மையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த மனு இன்று (ஜூலை 12) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பின்னர் பேசிய நீதிபதிகள், “மயானங்களை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். மயானங்கள் பராமரிப்பு குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'சீர்மிகு சட்டப்பள்ளியில் பயின்றவர்களுக்கும் உதவித்தொகை' - உயர் நீதிமன்றம்