மதுரை: விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “ அம்மச்சியாபுரத்தில் 126 வீடுகள் உள்ளன. அனைவரும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர். இதனால் அம்மச்சியாபுரத்தில் இமானுவேல் சேகரன் வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி ஆகஸ்ட் 29-ல் மனு அனுப்பினோம்.
செப். 10-ல் இம்மானுவேல் சேகரனின் சிலை நிறுவப்பட்டது. ஆனால், முறையாக அனுமதி பெறும் வரை சிலையை மூடிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இமானுவேல் சேகரன் சிலையை திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பவானி சுப்பராயன், “சிலை அமைக்க அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால், மனு கொடுத்த 12-வது நாளில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளனர். அம்மச்சியாபுரம் கிராமத்துக்கு செல்லும் பாதையில் பிற சமூகத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் முன்பு சாதி மோதல்களும் நடைபெற்றுள்ளன.
மேலும், சிலை வைக்க முறையாக அனுமதி பெற வேண்டியது அவசியம். சிறந்த மனிதர்களின் சிலையை முறையாக அனுமதி பெறாமல் வைப்பது ஏற்புடையது அல்ல. மனுதாரரின் மனு விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. சிலை வைக்க அனுமதி வழங்க பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
எனவே, முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலையை இம்மாதம் 19-தேதிக்குள் அந்த இடத்திலிருந்து அகற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டும். சாதி மோதல்களை தவிர்க்கும் வகையில் தமிழக முதல்வர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பிறகு சிலையை வைக்கலாம்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: “ஈபிஎஸ் செயல்திறன் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயார்” - ஜெயக்குமார்