மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கரோனா நோய்த் தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ஏழு கோடிக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வேலை செய்து வந்த பலர், தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் நடந்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதற்காக வருவாய் மற்றும் பேரிடர் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கப்படாததால் அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்கள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உடனடியாக தமிழ்நாட்டில் அரசு, தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அரசு, தனியார் பேருந்துகளை இயக்க செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்தனர்.