சிவகங்கை மாவட்டம், டி. புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "சிவகங்கை மாவட்டத்தில் ஆறாயிரம் கண்மாய்கள், மூன்றாயிரம் குளங்கள் உள்ளன. இவற்றின் நீராதாரமாக சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, தேனாறு, உப்பாறு, நாட்டாறு, விருசுகனியாறு, பாம்பாறு உள்ளிட்ட 10 சிற்றாறுகள் உள்ளன.
இந்த நீர்நிலைகள், சிற்றாறுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து மனு அளித்தாலும் அரசு அலுவலர்கள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுத்து பழைய நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விவரம், அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் விவரம், நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பது குறித்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாகச் செயலர் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.