புதுக்கோட்டை மாவட்டம் புதுவாகோட்டையைச் சேர்ந்த வைரமுத்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'பட்டுகோட்டை - காரைக்குடி இடையே அமைந்துள்ளது புதுவாக்கோட்டை. பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படுகிறது. புதுவாகேட்டை உட்பட ஏழு கிராமத்தினர் ரயில் பாதை குறுக்கே சென்ற சாலையை பயன்படுத்தி பிரதான சாலைக்குச் சென்றனர்.
அகல ரயில் பாதை அமைப்பு பணிக்காக ரயில் பாதை தரையில் இருந்து 15 அடிக்கு உயர்த்தப்பட்டதால் மக்கள் பயன்படுத்தி வந்த சாலை அடைக்கப்பட்டது. இதனால் புதுவாகோட்டையில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தரைப்பாலம் அமைக்க அரசு ரூ. 2.5 கோடி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் தரைப்பாலம் கட்ட ரயில்வே துறை சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் தரைப்பாலம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொதுமக்களின் நலன் கருதி புதுவாகோட்டை மேலகுடியிருப்பில் ஆறு மாதங்களில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க: கீழடியில் தொடர் ஆய்வு... மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!