தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இது தவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு திட்டங்களுக்காக இதுவரை இந்தப் பகுதியில் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகை - மதுரை - தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் குழாய்கள் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இந்நிலையில் முறையான அனுமதி பெறாமல் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் நோக்கில் ஓஎன்ஜிசி செயல்பட்டு வருகிறது.
ஆகவே முறையான அனுமதி பெறாமல் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு வழங்க குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 2018 அக்டோபர் 5 மற்றும் 2019 பிப்ரவரி 18 ஆகிய தேதிகளில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை எரிவாயு வழங்குவதற்கு குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 2018 அக்டோபர் 5 மற்றும் 2019 பிப்ரவரி 18 ல் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் மாதம் 2வது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.