மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாக்குபெற்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அரசியல் கட்சிகள் மீது தேர்தல் அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டது.
மேலும், தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சு. வெங்கடேசன் அவருக்கு உடந்தையாக சில சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தி, அவர்கள் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
இதற்குத் தேர்தல் ஆணையம் முழுமையாக உடந்தையாக செயல்பட்டுள்ளது. எனவே நடந்து முடிந்த மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் சு. வெங்கடேசன் வெற்றிபெற வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது சம்பந்தமாக முறையாக விசாரணை நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என அம்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை எந்த அமர்வில் விசாரிக்கப்படும் என உறுதி செய்த பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பது எப்படி? காவலர்களுக்கு பயிற்சி!