மதுரை கீழப்பனங்காடியைச் சேர்ந்த பாலாஜி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " நிகழாண்டு(2020) கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்காலகட்டத்திலும் மருத்துவ ஊழியர்கள் சுயநலம் பாராமல் சேவையாற்றி வந்தனர். பின்னர் பொருளாதார சிக்கல் காரணமாக ஊரடங்கைத் தளர்த்தும் நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது புதிதாக உருமாறிய கரோனா தொற்று பரவிவருகிறது. தமிழ்நாட்லும் அதன் பாதிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் கரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள், பணி முடிந்து அவர்களது வீட்டிற்கு செல்லவும், அங்கிருந்து மீண்டும் மருத்துவமனைக்கும் வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வீடுகளுக்குச் செல்வோரின் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளும், வயதானவர்களும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதனால் நோய் தொற்று பரவலும் அதிகரிக்கும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு, கரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அறைக்குள், சத்தான உணவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புகளுக்கான வசதிகளை செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், இளங்கோவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கரோனா வார்டுகளில் பணியாற்றுவோருக்கான வசதிகளை திரும்பப் பெற்றிருந்தால் அந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கரோனா நோய்த்தொற்று பரவினால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, கரோனா வார்டுகளில் பணியாற்றுவோருக்கு வழங்கப்பட்ட வசதிகள் திரும்பப் பெறப்பட்டு இருந்தால் அவற்றைத் தொடர்ந்து மேலும் இரண்டு வார காலத்திற்கு வழங்க இடைக்கால உத்தரவிட்டும், இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.