மதுரையைச் சேர்ந்த முகமது ரபிக் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இஸ்லாமிய செயற்பாட்டாளர் பழனி பாபாவின் நினைவு தினத்தையொட்டி, மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகே ஜனவரி 28ஆம் தேதி அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுமதி கோரி காவல் துறையிடம் மனு அளித்த நிலையில் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. ஆகவே, ஜனவரி 28ஆம் தேதி கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகே மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதை மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும். பொதுக்கூட்ட மேடை அமைத்தால் பொதுப்பணித் துறையிடமிருந்து உரிய சான்றிதழைப் பெற வேண்டும்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டிஜிட்டல் போர்டுகள், பதாகைகள் உள்ளிட்டவற்றை சாலைகளில் வைக்கக்கூடாது. முக்கிய காரணங்களுக்காக கூட்டம் நிறுத்தப்பட்டால் அல்லது மாற்றம் செய்யப்பட்டால் அதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்