ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அது நாட்டுக்கு ஏற்பட்ட ஈடு செய்யமுடியாத இழப்பு போல கருதும் நாம், ஒரு தூய்மைப் பணியாளர் உயிரிழந்த செய்தியை, வெறுமனே ’விஷவாயு தாக்கி பலி’ என இயல்பாக வாசித்துக் கடக்கிறோம். இப்படி, மக்களைச் சிந்திக்க விடாத, சாதி முறையைக் கேள்வி எழுப்பாமல், கரோனா நெருக்கடியில் திடீரென ’தூய்மைப் பணியாளர்கள்’ என்று அடையாளப்படுத்தினால் எல்லாம் சமநிலை அடைந்துவிடுமா?
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் சேவை மகத்தானது என இச்சமூகம் ஒருபுறம் கொண்டாடினாலும், மறுபுறம் அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக்கூட செய்துகொடுக்கத் தவறிவிடுகிறது. ஏனென்றால், இவர்கள்தானே என்ற அலட்சியம். சாதாரண நாள்களிலேயே மிகுந்த நெருக்கடியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கரோனா காலகட்டம் மேலும் சவாலாக மாறியுள்ளது.
என்னென்ன சவால்கள்?
மனிதக் கழிவுகளைக் கையால் அகற்றத் தடையாக துப்புரவுப் பணியாளர்கள் சட்டம் 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், வீட்டுக் கழிவுகளுடன் குழந்தைகளின் பேம்பர்ஸ் உள்ளிட்டவற்றைப் போடுவது, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்காமல் ஒன்றாகக் கொடுப்பது, நாப்கின்கள், உயிரிழந்த விலங்குகளின் உடல், சில நேரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் அனாதைச் சடலங்களை அப்புறப்படுத்துவது என சாதாரண நாள்களிலேயே அவர்கள் பணி சிக்கலானது. அப்படியானால், கரோனா நெருக்கடியில் சொல்லவா வேண்டும், உயிருக்கு உத்தரவாதமில்லாத நாள்கள் இவை... இப்போது புரிகிறதா? தூய்மைப் பணியாளர்களை அரசு எங்கு வைத்துள்ளது, நாம் எங்கு வைத்திருக்கிறோம் என்று.
தமிழ்நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள். இப்படி ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கும் ஒரு நாள் பணி நிரந்தரம் கிடைக்கும் என்றே நம்பி நாள்களைக் கடத்துகின்றனர். எதார்த்தமோ... அவர்களுக்குக் கடைசிவரை எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. இதுகுறித்து சில தூய்மைப்பணியாளர்களிடம் பேசினோம்.
மதுரை வடக்கு மாசி வீதி 83ஆவது வார்டில் சகிக்க முடியாத துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கழிவுநீர்த் தொட்டியைச் சிறிதும் முகச்சுளிப்பின்றி திறந்து அடைப்பைச் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். அவர்களில் ஒருவர்தான் நாச்சியப்பன். அவர் நம்மிடையே தனது அனுபவத்தைப் பகிர்கையில், “நாங்கள் செய்யத் தேவையில்லாத பணியையும் கூட இந்த கரோனா காலத்தில் செய்துவருகிறோம். கடந்த 14 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றிவருகிறோம். சுகாதாரப் பணியாளர்களில் மிக மிக ஆபத்தான பணிகளைக் கொண்டவர்கள் நாங்கள்தான், ஆனால் போதுமான சம்பளம் கிடையாது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் தகரத்தைக் கொண்டு தெருவை அடைப்பதும், அதனைத் தொடர்ந்து பராமரிப்பதும் தற்போது எங்களுடைய வேலையாகிவிட்டது. ஆனால், எங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது” என்கிறார் தோய்ந்த குரலில்.
பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாதாள சாக்கடைப் பணியாளர்கள், மலக்குழி தொடர்புடைய பணியாளர்கள் உள்பட 3 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 12 மாநகராட்சிகள், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், 180க்கும் மேற்பட்ட நகராட்சிகள், 12 ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இவர்கள் பணி செய்துவருகின்றனர். தற்போது கரோனா நெருக்கடியில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய தூய்மைப் பணியாளர் சரவணன், “உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய இப்பணிக்குத் தேவையான உபகரணங்கள் எவையும் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் ஒப்பந்த பணியாளர்கள்தான், அதற்காக எங்கள் உயிருக்கு மதிப்பில்லையா? கையுறை, முகக்கவசம், ரெஃப்ளக்டர் ஜாக்கெட் இவைதான் எங்களிடம் உள்ள உபகரணங்கள். இதுகுறித்துப் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், மதுரை மாநகராட்சி கவனம் செலுத்தவில்லை.
விஷவாயு தாக்கி உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்குக்கூட போதுமான நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தைக்கூட முறையாக வழங்க மறுக்கிறார்கள் என்பதுதான் எங்களை மேலும் துயரில் ஆழ்த்துகிறது.
மதுரையில் ஒரு வார்டுக்கு மூன்று முதல் ஆறு பேர் 100 வார்டுகளில் பணியாற்றுகிறோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இந்த 100 நாள்களில் மொத்தமே நான்கு முறைதான் எங்களுக்குத் தேவையான முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் பலருக்குக் கையுறை இல்லை, தரச்சான்று வழங்கப்பட்ட உபகரணங்கள் எங்களில் யாருக்கும் தராமல் எங்கள் உயிரோடு விளையாடுகிறார்கள்” எனக் கூறி நம் மனதைக் கனக்கச் செய்கிறார்.
தூய்மைப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கிய சட்டங்கள் ஏடுகளில் இருப்பதோடு சரி, அதை நடைமுறைப்படுத்தவே இல்லை என ஆவேசம் காட்டுகிறார், பாலசுப்பிரமணியன். சிஐடியுவின் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரான பாலசுப்பிரமணியன் கூறும் புள்ளிவிவர தகவல்கள் நம் அரசின் நடவடிக்கைகளைக்கூட கேள்விக்குறியாக்குகிறது. அவர் கூறுகையில், “கையால் மலம் அள்ளுவதை அரசு தடை செய்வதாகக் கூறி தடைச் சட்டம் 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2013இல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
ஆனால், தற்போதுவரை இது அமல்படுத்தப்படவில்லை, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உயிரிழந்த பாதாள சாக்கடைத் தொழிலாளர்களில் ஐந்தில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற விஷவாயு மரணத்தையும் சேர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 151 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் 13 பேர் மரணமடைந்துள்ளனர்” என்றார்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி தரப்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, ”தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வப்போது கரோனாவுக்காக தெர்மல் ஸ்கிரீனிங்கும் செய்யப்பட்டுவருகிறது.
அரசு நிர்ணயம் செய்துள்ள கூலி, ஒப்பந்ததாரர்கள் மூலமாக வழங்கப்பட்டுவருகிறது. அதனை அந்தந்த பகுதி மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என தாமரை இலையில் தண்ணீர் போல பட்டும் படாமலும் பதிலுரைத்தனர், அலுவலர்கள்.
மதுரை மாநகராட்சியில் மட்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏறக்குறைய 6 ஆயிரத்து 500 தூய்மைப் பணியாளர்கள் பணிசெய்துவருகின்றனர். ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இதற்கு மாரடைப்பு உள்ளிட்ட வேறு சில நோய்கள் காரணம் என்றாலும் கூட, அரசு தூய்மைப் பணியாளர்கள் ஆபத்தான வேலையைப் புரிந்துகொள்ளவேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுடன் களத்தில் பணியாற்றிய புகைப்படக் கலைஞர் பழனிக்குமார் பேசுகையில், “அனைத்துப் பேரிடர் காலங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றிவருகின்றனர். ஆனாலும்கூட, அவர்கள் மீது அரசுக்கு துளியும் அக்கறையில்லை.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களைப் பார்த்தாலே அது புரியும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் முகக்கவசங்களை நீங்கள் உற்றுநோக்கினால் நன்கு விளங்கும். அதனுடைய தரம், ஐந்து நிமிடங்களில் மொத்தமாக ஈரமாகிவிடக்கூடிய அளவில்தான் இருக்கிறது. இந்த முகக்கவசங்களை அணிந்துகொண்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடையாது, குப்பைகள் அள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் இடர்களில் எவ்வித நிவாரணமும் பெற முடிவதில்லை” என்றார்.
அனைவருக்கும் அரசே மருத்துவக் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும். கரோனா நெருக்கடியில் ஊழியர்களின் பாதுகாப்பு உடைகளை மாற்றியமைக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கென பாகுபாடு காட்டுவது அறமான செயல் அல்ல. குறிப்பாக, பேரிடர் காலங்களில் அவர்களைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் தூக்கி எறிந்துவிடக் கூடாது.
ஒரு சாதியினர் மட்டுமே புழங்கும் இந்த சுகாதாரப் பணியினை நவீனத்துவப்படுத்த வேண்டும். கல்வி மற்றும் அரசுத் துறைகளிலும் இதற்கென மதிப்பான இடம் இருக்குமேயானால் வரும் தலைமுறையிலாவது சாதியின் வீச்சம் இத்தொழிலிருந்து மறையும்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?