திருநெல்வேலியைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் பரமசிவ ஐயப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சித்தார் சத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களிலிருந்து அமமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிற இடமானது, ஒரு தனி நபருக்குச் சொந்தமான இடமாகும். எனவே நெல்லை மாவட்டம் சித்தார் சத்திரத்தில் 24.2.2020 அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி நெல்லை மாவட்ட காவல் துறையிடம் மனு அளித்தோம். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர். எனவே வருகிற 24.2.2020 அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து, பொதுக்கூடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, விழாவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...'ஏழு பேர் விடுதலை.... எங்களுக்கு அதிகாரம் இல்லை': தமிழ்நாடு அரசு