திருநெல்வேலி மாவட்டம் மேகலிங்கபுரத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலை அமைப்பதற்காக எனக்குச் சொந்தமான 14.5 சென்ட் நிலம், 2012இல் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை எனக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், உரிய இழப்பீடு வழங்க நான்கு வாரத்தில் பரிசீலிக்க வேண்டுமென 2019இல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரையில் இழப்பீடு வழங்கவில்லை.
தற்போது பொருளாதார வசதியின்றி தவிக்கிறேன். எனவே, எனக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய அரசு அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த விசாரணையானது நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலை அமைப்பதற்காக நிலம் எடுத்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
நீண்ட காலமாகி இதுவரையில் இழப்பீடு வழங்கவில்லை. எனவே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.