தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் லைசென்ஸ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"
தமிழகத்தில் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐஎம்எப்எல்) விற்பனை 1937-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
மது பழக்கத்தால் உயிரிழப்பு அதிகமானதால் 1971-ல் ஐஎம்எப்எல் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
பின்னர் அரசின் வருவாய் குறைந்ததால் ஐஎம்எப்எல் மதுபான விற்பனைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுபானம் விற்கப்படுகின்றன. 11 ஐஎம்எப்எல் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.
இந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்றன. போதைக்காக மதுபானத்தில் அதிகளவில் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.
டாஸ்மாக் கடைகளுக்கு தரம் குறைந்த மதுபானங்களை விற்க உற்பத்தியாளர்கள் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் பேர் மதுவால் உயிரிழப்பதும், இது மொத்த உயிரிழப்பில் 5.3 சதவீதம் என்றும், 200-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மது பழக்கம் காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
மது பழக்கத்தை கட்டுப்படுத்த மதுபான சந்தையை கட்டுப்படுத்துவது, சுலபமாக மதுபானம் கிடைப்பதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது, மதுவால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மது போதையிலிருந்து மீள நினைப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் மையங்களை திறப்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
இந்த யோசனைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக நலனை பற்றி கவலைப்படாமல் வருமானத்தை மட்டும் மனதில் வைத்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
14 வெளிநாடுகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் மது குடிக்க உரிமம் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
இதனால் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும். இதனால் அனைவருக்கும் மது கிடைப்பது தடுக்கப்படும்.
எனவே, தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் லைசென்ஸ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்"
என கூறியிருந்தார்.
தமிழக உள்துறை இணைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில்" மதுபானங்கள் தயார் செய்யப்படும் போதும் தயாரிக்கப்பட்ட பின்னரும் முறையாக பாரன்சிக் துறையின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
விற்பனையின் போது 21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது உற்பத்தியாளர்களுக்கும், மது பாட்டில்களில் உள்ள 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மது விற்கக் கூடாது என ஸ்டிக்கர்களை ஓட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை மது வாங்க வருபவர்களின் வயது குறித்த சந்தேகம் வரும்போது, அவர்களது ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது அவர்களின் புகைப்படம் கொண்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது வாங்க வருவோரின் பெயர், பிறந்த தேதி, அடையாள அட்டை, கண்காணிப்பாளர் அல்லது விற்பனை செய்வோரின் கையெழுத்து ஆகியவற்றைக் கொண்ட ஏட்டினை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் மது விற்பனை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள விதி முறைகளை மீறுவோர் மீது பணியிடைநீக்கம் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து துறை ஆணையர், மதுவிலக்கு அமலாக்க துறை ஆணையர், தமிழக காவல் துறையின் கூடுதல் இயக்குனர், போக்குவரத்து துறையின் கூடுதல் ஆணையர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், சமூக நலத்துறை இயக்குனர், டாஸ்மாக்கின் பொது மேலாளர், சென்னை டிடிகே மருத்துவமனையின் இயக்குனர், மனநல மருத்துவ அமைப்பின் மாநில அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இதுவரை ஏழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுவின் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்..