தேனி மாவட்டம் போடி தாலுகாவை சேர்ந்த செல்வராணி என்ற காவலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ கடந்த 1997ஆம் ஆண்டு தேனி காவல் நிலையத்தில் காவலராக பணியில் சேர்ந்தேன். பின்பு தலைமை காவலராக பதவி உயர்வு பெற்றேன்.
இந்நிலையில் சமீபகாலமாக தேனி சப் டிவிஷன் காவல் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ், ஆய்வாளர் முருகேசன் தரப்பில் எனக்கு பல்வேறு வகையிலும் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
கடந்த 23 ஆண்டுகளாக எந்த பிரச்னையிலும் சிக்காமல் வேலை செய்து வருகிறேன். ஆனால் தற்போது என்னை பல்வேறு பிரச்னைகளில் சிக்க வைக்க மேற்கண்ட அலுவலர்கள் முயற்சிசெய்கின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ உத்தரவின்பேரில் என்னை தேனி காவல் நிலையத்தில் இருந்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
கடந்த மே மாதம் அங்கிருந்து அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இவ்வாறு ஓரிடத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்ற விடாமல், அங்கும் இங்குமாக அலைக்கழிக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கு இதர காவலர்களும் ஒத்துழைக்கின்றனர். பணியில் இருந்தபோதது உடல்நலக் குறைவால் சிறிது நேரம் ஓய்வுக்காக சென்றேன். இதற்காக என்னுடைய விளக்கத்தை கேட்காமல், தண்டித்தனர்.
இதுதொடர்பாக மேல் அலுவலர்களிடம் நான் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. நான் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை பணி செய்யவிடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
எனவே முத்துராஜ் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னுடைய பணிக்கு பாதுகாப்பு அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர் உயர் அலுவலர்களின் உத்தரவை சரிவர செயல்படுத்துவதில்லை. இதற்காக பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை வேண்டுமென்றே தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சுரேஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு பணி ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக, மேல் அலுவலர்கள் தொந்தரவு கொடுத்தால்,அதை காவல் துறை தலைவருக்கு (DGP) புகார் மனு கொடுக்கலாம். அந்த மனுவை காவல் துறை தலைவர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.