மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஊர்சேரி பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் தமிழ்வளவன். இவர் பிறக்கும்போதே கண்பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார். தமிழ்வளவன் பிஏ பட்டப்படிப்பு வரை படித்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளிக்காக ஒதுக்கப்பட்ட ஊர்சேரி கிராமத்தில் காலியாக இருந்த ஊராட்சி செயலர் பணிக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். பின்னர், பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்ற செயலர் பணிக்கான நேர்முகத் தேர்விலும் பங்கேற்று தகுதியும் பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறு ஊராட்சிகளில், ஐந்து ஊராட்சிகளில் செயலர் பணிக்கான நபர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஊர்சேரி ஊராட்சியில் மட்டும் செயலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தமிழ்வளவன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்னை அந்தப் பணியில் நியமிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்வளவன், ”ஊர்சேரியில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலர் பணியிடத்தை நிரப்புவதில், அரசியல் தலையீடு இருப்பதாக கருதுகிறேன். மேலும், இப்பணியை வழங்குவதற்காக என்னிடம் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டார்கள். நான் பணம் கொடுக்க மறுத்த காரணத்தினால், மாற்றுத்திறனாளி பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சி செயலர் பணியை, பொதுப்பிரிவுக்கு மாற்றி காலிப்பணியிடமாக அறிவித்து புதிதாக நேர்காணல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.
எனவே எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம ஊராட்சி செயலர் பதவியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: தையல் மிஷினை மிதித்துக் காட்டு... மாற்றுத் திறனாளியை வஞ்சித்த அலுவலர்!