மதுரை விமான நிலையத்திற்கு செப்டம்பர் 22ஆம் தேதி துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அஜ்மல் கான், காலிக் முகமது, முனீஸ்ப்பு ஆகிய மூவரும் பாதுகாப்புக்கு வைக்கப்படும் பாதுகாப்பு கருவியை தாண்டும் போது அதிலிருந்து வெளிப்படும் ஒலியைக் கண்ட பாதுகாப்பு அலுவலர்கள் மூவரையும் சோதனை செய்தனர்.
சோதனையின்போது மூவரிடமிருந்து விளையாட்டிற்காக பயன்படுத்தப்படும் 23 துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 23 துப்பாக்கிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த மூவரும் இது இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த 23 துப்பாக்கிகளும் இந்திய துப்பாக்கிச் சுடும் கழகங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்று இரண்டு நாட்கள் சோதனை செய்யப்பட்டது.
ஆனால், சோதனையின் முடிவில் ஒரு துப்பாக்கிகூட எந்த துப்பாக்கி சுடும் கழகங்களிலும் பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 23 துப்பாக்கிகளையும் மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைப்பற்றினர். மேலும், இந்த 23 துப்பாக்கிகளின் மதிப்பு 17 லட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி துப்பாக்கிகளைக் கொண்டு வந்த மூவரிடமும் தற்போது சுங்கத் துறை அலுவலர்கள் தங்களது முதற்ட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.