மதுரை, ஜெயந்திபுரம், நேதாஜி சாலைப்பகுதியில் சாலையோரம் 8 தோட்டாக்கள் கிடப்பதாக, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல் துறையினர் விரைந்து சென்று, அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கிருந்த தோட்டாக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்குத் தொடர்புடைய நபர்கள் யார் எனக் கண்டறிய மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயவியல் நிபுணர்கள் மூலமாகவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டன.
நேதாஜி சாலைப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளிலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவரிடம் காவல் துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த தோட்டாக்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் தந்தை துரைப்பாண்டியன் காவல்துறையின் அனுமதி பெற்று, துப்பாக்கி வைத்திருந்ததும்; பிறகு காவல் துறையினரிடம் துப்பாக்கியை ஒப்படைத்த நிலையில் தோட்டாக்கள் மட்டும் அவரிடமே எஞ்சி இருந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் விஜய் குடும்பத்தாருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது உறவினர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வந்து வெளியே கொட்டியுள்ளனர். அதில் அந்த தோட்டாக்களும் இருந்துள்ளன. இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் விஜயைக் கைது செய்து, சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கித் தோட்டாக்களை வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.